நம்பிக்கையும் ஏமாற்றங்களும்
தமிழில் கலைத்தரமான படங்கள் எடுப்பதற்கான வெளி இல்லை என்ற யதார்த்தத்தை மனத்தில் கொண்டுதான் நாம் தமிழ்ப் படங்களை அணுக வேண்டியிருக்கிறது. வணிகக் கணக்குகளை மறந்துவிட்டுப் படம் எடுக்கும் பண்பாடோ அதற்கான வாய்ப்போ முற்றாக மறுக்கப்பட்டிருப்பதால் ஒரு கலைஞன் முழுக்க முழுக்கத் தன் கலை வேட்கைக்கான வெளிப்பாடாகத் திரைப்படத்தைக் கொள்ளும் வாய்ப்பு தமிழில் இல்லை. தீவிர சினிமாவுக்கான களமோ இணை சினிமாவுக்கான இடமோ இல்லாத நிலையில் வணிக சினிமா என்னும் சட்டகத்துக்குள் வெளியாகும் வித்தியாசமான சில முயற்சிகளைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. சற்றே வித்தியாசமான முயற்சிகளாக இருந்தாலும் அவற்றைப் பாராட்டியாக வேண்டியிருக்கிறது.
நம்பிக்கை அளித்த சில படங்கள்
2011இல் வெளியான படங்களிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வித்தியாசமான படங்களைப் பொறுக்கி எடுக்க வேண்டியிருக்கிறது. ஆடுகளம், அவன் - இவன், அழகர்சாமியின் குதிரை, தென்மேற்குப் பருவக் காற்று, ஆரண்ய காண்டம், வாகை சூட வா, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களைச் சென்ற ஆண்டின் வித்தியாசமான முயற்சிகளாக அடையாளம் காட்டலாம். இவை காட்சியமைப்பு, பாத்திர வார்ப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, நேர்த்தி, யதார்த்தத்துக்கு நெருக்கமான காட்சிகள், உரையாடல்கள், நடிப்பு, கதையம்சம் முதலான அம்சங்களில் ஒரு சில அம்சங்களிலேனும் தனித்து நிற்பவை.
ஆடுகளம், வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, அவன் - இவன் ஆகிய படங்கள் வித்தியாசமான களங்களைக் கொண்டவை. வெற்றி மாறனின் ஆடுகளம், தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்றுவரும் சேவல் சண்டையைக் களமாகக் கொண்டது. இயக்குநர் தான் தேர்ந்துகொண்ட களம் குறித்துப் பல விஷயங்களை நுட்பமாக அவதானித்து அவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளார். சேவல் சண்டை என்பது பின்புலம்தான். உண்மையில் இயக்குநர் சொல்லவருவது மனிதர்களைப் பற்றி. அவர்களுக்குடையே நிலவும் உறவுகள் பற்றி. அந்த உறவுகள் வாழ்நிலைகளையும் வாழ்நிலைகள் உறவுகளையும் பரஸ்பரம் பாதிக்கும் விதங்கள் பற்றி. சேவல் சண்டையின் பின்புலத்தில் இவற்றைச் சொல்லும் வெற்றி மாறன் சேவல் சண்டையை மனிதச் சண்டைகளின் குறியீடாக மாற்றுவதில் வெற்றி அடைகிறார். பெருமளவில் யதார்த்தத்துக்கு நெருக்கமாக வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. பின் பகுதியில் வரும் வேகமான சில திருப்பங்களும் படத்தில் இணைகோடாக வரும் காதல் பரிமாணமும் நம்பகத்தன்மையுடன் உருப்பெறவில்லை என்பதும் படத்தின் குறைகள். முதல் பகுதியின் முற்பகுதியில் தெரியும் ஆவணத்தன்மையையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். என்றாலும் தான் குருவாக ஏற்றுக்கொண்ட மனிதர் தனக்குத் துரோகம் செய்தாலும் அவரைப் பழிவாங்காமல் அவரது பழியைத் தானே ஏற்றுக்கொள்ளும் நாயகனின் செயல் படத்திற்குக் கனத்தைக் கூட்டிவிடுகிறது. தனுஷ், வ.ஐ.ச. ஜெயபாலன், கிஷோர் ஆகியோரின் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். பேட்டைக்காரன் பாத்திரம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
களவாணி என்னும் இயல்பான பொழுதுபோக்குப் படத்தை அளித்த இயக்குநர் சற்குணம் தன் இரண்டாவது படமான வாகை சூட வா படத்தில் செய்தி சொல்ல முயன்றிருக்கிறார். செய்தியைக் கதையம்சத்துடனும் கலைத்தன்மையுடனும் சொல்வதில் அவருக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. படத்தின் பல பகுதிகள் ஆவணத்தன்மை கொண்டவையாகவும், செய்தி சொல்லும் படங்களுக்கே உரிய நாடகத்தன்மையுடனும் வகை மாதிரித் தன்மையுடனும் உள்ளன. ஆனால் தான் தேர்ந்துகொண்ட காலத்தையும் களத்தையும் நம்பகத்தன்மையோடு காட்சிப்படுத்துவதில் இயக்குநர் வெற்றி பெறுகிறார். படத்தின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் பாராட்டத்தக்க விதத்தில் உள்ளன. நாயகி இனியாவின் பாத்திரப் படைப்பும் அவரது நடிப்பும் நன்றாக உள்ளன. அழகான காட்சிப் படிமங்கள், பொருத்தமான பின்னணி இசை (புதுமுகம் ஜிப்ரான்) ஆகியவை ஆவணத்தன்மையையும் தேய்படிமங்கள் கொண்ட திரைக்கதையையும் மீறி இந்தப் படத்தை நினைவில் நிறுத்துகின்றன.
வெண்ணிலா கபடிக் குழு என்னும் யதார்த்தமான படத்தை விறுவிறுப்பாகத் தந்த சுசீந்திரனின் படம் அழகர்சாமியின் குதிரை. பாஸ்கர் சக்தியின் சிறுகதையை முழுநீளத் திரைக்கதையாக்க இவர் செய்துள்ள முயற்சி வெற்றிபெறவில்லை. எண்பதுகளைச் சேர்ந்த கிராம வாழ்வின் தன்மை, அங்குள்ள மனிதர்களின் இயல்புகள், மையப் பாத்திரத்தின் அப்பாவித்தனமும் முனைப்பும் ஆகியவை நேர்த்தியாகப் பதிவாகியிருக்கின்றன. இளையராஜாவின் பின்னணி இசை பாந்தமாக உள்ளது. ஆனால் திரைக்கதையின் போக்கும் திருப்பங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இல்லை. பரிசோதனைப் படங்கள் என்று சொல்லப்படும் படங்களுக்கான தேய்படிமங்கள் இந்தப் படத்தைப் பலவீனமாக்குகின்றன. வணிகப் படமோ வித்தியாசமான படமோ, திரைக்கதையின் அமைப்பும் அதன் உள்ளார்ந்த தர்க்கமும் சரியாக அமையாவிட்டால் அது பார்வையாளர்களைக் கவர வாய்ப்பில்லை.
புதிய களங்கள், அதிகம் அறிமுகமாகியிராத பாத்திரங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அழுத்தமான காட்சிப் படிமங்கள் மூலம் திரையில் கொண்டுவரும் இயக்குநரான பாலாவின் அவன் இவன் படம் அவருடைய வலுவான அம்சங்களை பலவீனமான கதையின் மீது அமைத்த முயற்சியாக வெளிப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களை அசர வைப்பதில் காட்டிய கவனத்தை யதார்த்தத்தைச் சித்தரிப்பதிலும் திரைக்கதை ஒழுங்கிலும் காட்டவில்லை. மனித இயல்பின் சில அம்சங்கள் அழுத்தமாக வெளிப்படும் இப்படத்தில் படத்தின் பல்வேறு கூறுகள் நோக்கமற்று இயங்குகின்றன. கிட்டத்தட்ட எல்லாமே சிதறலாக இருப்பதால் சலனம் ஏற்படுத்தாமல் கடந்து போகின்றன. கதையில் வரும் காதல்கள் அபத்தமானவை. பாத்திரங்களுக்கு வரும் நெருக்கடிகள், வில்லனின் பிரவேசம், உச்சக் காட்சியில் வரும் 'துஷ்ட சமஹாரம்' ஆகியவை அப்பட்டமான வகை மாதிரித்தன்மை கொண்டவை. களம், நடிப்பு, காட்சிப்படுத்துதல், பார்வையாளர்களை அசரவைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்கும் பாலா மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் அளவுக்கதிகமாகச் சலுகை எடுத்துக்கொள்கிறார். ஜமீனுக்கும் விஷாலுக்கும் இடையே உள்ள விசித்திரமான உறவு குறிப்பிடத்தக்கது. காவல்துறை தொடர்பான காட்சிகள் அபத்த நாடகம்போல உள்ளன. அழுத்தமான காட்சி மொழியைக் கொண்ட இப்படம் ஆழமோ உள்ளார்ந்த இணக்கமோ ஒருங்கிணைந்த நோக்கமோ இல்லாமல் தடுமாறுகிறது.
யதார்த்தத்துக்கு நெருக்கமான பாத்திரங்களும் காட்சியமைப்பும் கொண்ட படம் தென்மேற்குப் பருவக்காற்று. இதிலும் கதையம்சமும் திரைக்கதையும் மொத்தப் படத்தையும் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக இல்லை. நாயக, நாயகியின் பாத்திரங்களும் வலுவாக உருப்பெறவில்லை. நாயகனின் அம்மாவின் பாத்திரத்திலும் பண்பாட்டு, சமூகப் பின்புலம் சார்ந்த கூறுகளிலும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி இதர அம்சங்களில் தன் பிடியை இழந்திருக்கிறார். இதிலும் பின்னணி இசை (புதியவர் ரஹ்நந்தன்) நன்றாக உள்ளது. படத்தின் தன்மையோடு இணைந்து ஒலிக்கிறது.
புது இயக்குநர் சரவணனின் 'எங்கேயும் எப்போதும்' ஒரு சில அம்சங்களில் குறிப்பிடத்தக்க முயற்சி. படத்தின் அடிப்படை அம்சத்தில் புதுமை இல்லை (ஒரு புள்ளியில் வந்து சேரும் பல்வேறு மனிதர்களின் கதைகளின் தொகுப்பு) என்றாலும் அந்த மனிதர்களின் சித்தரிப்புகள் கூர்ந்து கவனிக்கவைக்கின்றன. பாத்திர வார்ப்புகள் நேர்த்தியாக உள்ளன. காதல்கள் ஆகிவந்த சூத்திரங்களுக்குள் சிக்காமல் ரசிக்கும்படி உள்ளன.
இன்னொரு புதியவரான குமாரசாமி ராஜாவின் ஆரண்ய காண்டம் சென்ற ஆண்டு வெளியான படங்களுள் சிறப்பான முயற்சி என்று சொல்ல வேண்டும். கதைக் களன் சார்ந்த கவனம், பாத்திர வார்ப்புக்கள், கதையம்சம், திரைக்கதை, பெருமளவில் நம்பகத்தன்மை கூடிய திருப்பங்கள், காட்சிப்படுத்தலின் அழகியல் நுட்பமான நடிப்பு, குறியீட்டுத் தன்மை கொண்ட காட்சிப் படிமங்கள், யதார்த்தமான வசனங்கள், பின்னணி இசை (யுவன் ஷங்கர் ராஜா) ஆகியவை இந்தப் படத்தைச் சராசரியான தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் தனித்துக் காட்டுகின்றன. ஆண்மை தொடர்பான சிக்கல்கள், பழம்பெருமை என்னும் சுமை, பிழைத்திருத்திருத்தலுக்கான நெருக்கடியால் தீர்மானிக்கப்படும் செயல்பாடுகள், அநீதிகள் நிறைந்த சூழலில் சுய பாதுகாப்பு மடடுமே அறமாகக் கருதப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் இந்தப் படம் கலைப் படைப்பின் பல்வேறு கூறுகளை இயல்பாகக் கொண்டிருக்கிறது.
தமிழில் ரவுடியிஸம் பறிய படங்களின் பொதுத்தன்மையிலிருந்து மேலெழும்பி நிற்பது இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். பார்வையாளர்களை அசத்துவதற்காக வலிந்த காட்சிகளைத் திணிக்காமல், சில்லறைத்தனங்கள் இல்லாமல், மிகை நாயக அம்சங்கள் இல்லாமல் இதைச் சாதித்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. காட்சியமைப்பு, பாத்திர வார்ப்பு, உரையாடல்கள், காட்சிகளின் வண்ணங்கள் ஆகியவற்றால் இது முக்கியமான படமாகப் பரிமளிக்கிறது.
படத்தின் ஆதாரமான அம்சம் படம் தேர்ந்துகொண்ட சட்டகத்தை விட்டு மேலெழும்பிப் பொதுத்தன்மை பெறத் தவறுவது படத்தின் குறை. எது தேவையோ அதுவே தர்மம் என்னும் சொற்களின் விளக்கமாக விரியும் படம், இந்தச் சொற்கள் முன்னிறுத்தும் வாழ்க்கைப் பார்வை சார்ந்து விரிவுகொள்ளத் தவறுகிறது. ஒரு கலைப் படைப்பு அது தேர்ந்துகொண்ட களத்தில் தீவிரமாகவும் ஆழமாகவும் பயணம் செய்யும்போது அதன் உள்ளார்ந்த அம்சம் குறிப்பிட்ட களத்தைத் தாண்டி மேலெழும்பிவிடும் அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதம் ஆரண்ய காண்ட்த்தில் நிகழவில்லை. படத்தின் ஆதாரமான செய்தியும் அதில் பிரதிபலிக்கப்படும் வாழ்க்கையும் படத்தின் சட்டகத்துக்குள் நின்றுவிடுவது படத்தின் முக்கியமான குறை அல்லது போதாமை. என்றாலும் சமகாலத் தமிழ்ப் பின்னணியில் இத்தகைய குறைகளைப் பெரிதுபடுத்துவது நியாயமல்ல.
சாந்தகுமார் என்னும் புதியவர் இயக்கியுள்ள மௌன குரு படம் சற்றே மெதுவாக நகர்ந்தாலும் நேர்த்தியாக உருப்பெற்றிருக்கிறது. குற்றவியல் பின்னணியில் அமைந்த கதையைச் செயற்கைப் பூச்சுக்கள் இல்லாமல் முன்வைப்பத விதத்தில் இது கவனம் பெறுகிறது. சில்லறைத்தனங்கள் இல்லாமல், திரைக்கதையில் அதிக ஓட்டைகள் இல்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சாந்தகுமார்
**
ஏமாற்றமளித்த சில படங்கள்
வித்தியாசமான முயற்சிகளாக அடையாளம் காணப்பட்டு ஏமாற்றம் அளித்த சில படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. இயக்குநர் விஜயின் தெய்வத் திருமகள் படம் செயற்கையான திருப்பங்கள் கொண்டிருந்தாலும் கதையம்சத்திற்காகக் கவனம் பெறுகிறது. மன வளர்ச்சி குன்றிய ஒரு மனிதனுக்கும் அவனுடைய குழந்தைக்கும் இடையிலான பாசமே படத்தின் மையம். சமூகத்தில் அந்த உறவு எத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை வைத்துப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். மன வளர்ச்சி குன்றிய ஒரு மனிதனின் வாழ்வு தமிழில் முன்பே சொல்லப்பட்டிருந்தாலும் ஐந்து வயதுக் குழந்தையின் மன வளர்ச்சியே கொண்ட ஒருவன் தந்தையாக நேர்ந்து அதனால் படும் அவஸ்தைகளைச் சொல்வதால் இது தனித்து நிற்கிறது. கதையின் அடிப்படையான இந்த அம்சம் ஐ ஆம் சாம் என்னும் ஆங்கிலப் படத்திலிருந்து கடன் வாங்கப்பட்டது என்றாலும் இதைத் தமிழ்ப் பின்னணியில் பொருத்தி முற்றிலும் வித்தியாசமான படமாக ஆக்கியிருக்க முடியும். ஆனால் விஜய் தன்னைப் பாதித்த படத்துக்கு நெருக்கமாக நிற்பதன் பாதுகாப்பையே விரும்பியிருக்கிறார். கதையிலிருந்து மையப் பாத்திரத்தின் தோற்றம் வரை பெரும்பாலான விஷயங்கள் மூலத்தின் அப்பட்டமான நகல்களாக இருக்கின்றன. தேர்ந்த நடிப்புக்குப் பேர்போன விக்ரம் தன் தன் பாத்திரத்தைக் கையாளும் விதம்கூட மூலப் படத்தின் நடிகரைப் பெருமளவில் நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. விஜய் சொந்தமாக உருவாக்கிய அம்சங்களில் எந்தப் புதுமையும் இல்லை.
படத்தில் வேறு பிரச்சினைகளும் உள்ளன. மையப் பாத்திரத்தின் மீது ஒரு பெண் அனுதாபம் கொண்டு நெருங்கிப் பழகுகிறள். அவனைக் குணப்படுத்த முயற்சி செய்வதற்குப் பதில் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்கிறாள். பிறகு, குழந்தையைப் பிரிந்து அவன் தவிக்கும்போது அவனுக்கு உதவும் ஒரு பெண் தற்செயலாக அவன்மீது தன் உடல் பட்டதும் காதல் வயப்படுகிறாள். ஐந்து வயதுக்கான மன முதிர்ச்சி உள்ளவன் கடைசியில் தன் குழந்தை தொடர்பாக மிகவும் பக்குவமான, விவரமான முடிவை எடுக்கிறான்.
மாறுபட்ட ஆளுமைகள், மாறுபட்ட பின்னணிகள், மாறுபட்ட அணுகுமுறைகள் ஆகிய முரண்களிடமிருந்து பிறக்கும் சலனங்களை மையப்படுத்தும் முரண் படம் கதையம்சத்திலும் எடுக்கப்பட்டுள்ள விதத்திலும் வித்தியாசமாக உள்ளது. ஆனால் இதுவும் ஸ்ட்ரேஞர்ஸ் ஆன் தி ரோட் என்னும் படத்தின் அப்பட்டமான தழுவலாக இருப்பதால் மனதாரப் பாராட்ட முடியவில்லை. இயல்பான வசனங்களும் பிரசன்னாவின் அனாயாசமான நடிப்பும் மனதில் நிற்கின்றன.
தன் அடையாளத்தைத் தேடும் ஒரு புகைப்படக் கலைஞனின் வாழ்வைக் கூற முயலும் செல்வராகவனின் மயக்கம் என்ன படம், செயற்கையான நிகழ்வுகள் மூலம் அதைச் சொல்லியிருக்கிறது. நாயகனின் கனவும் அவனது கலைத் தாகமும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவனுக்கு ஏற்படும் நெருக்கடிகள் செயற்கையாக உள்ளன. அவன் காதலும் அப்படியே. பின் பாதியில் அவனுக்கு ஏற்படும் பாதிப்பும் அதிலிருந்து அவன் மீள்வதும் நம்ப முடியாத விதத்திலேயே உள்ளன. தான் காட்ட விரும்பும் யதார்த்தத்தை நாடகீயமான திருப்பங்கள் மூலம் சித்தரிப்பதில் வல்லவரான இயக்குநர் செல்வராகவன், இந்தப் படத்தில் பலவீனமான திரைக்கதை, பார்த்துப் பார்த்துச் சலித்த சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் ஏமாற்றம் அளிக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவு இலக்கை எட்டத் தவறிய முயற்சி என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்க்கக்கூடிய சம்பவங்களை வைத்தே திரைக்கதையை அமைத்திருக்கிறார் முருகதாஸ். திருப்பங்கள் பலவீனமாக உள்ளன. தமிழர்களின் பழம்பெருமையை முன்வைக்கும் இந்தப் படம் அதை ஒரு திரை அனுபவமாக மாற்றுவதற்குப் பதில் வெறும் கோஷமாகச் சுருக்கிவிடுகிறது.
ராதா மோகனின் பயணம், விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு சம கால அரசியலை விமர்சிக்கிறது. வணிக சினிமாவின் கூறுகள் பகடி செய்யப்படுவதும் வன்முறைக்கு மூல காரணமான அரசியல் கூத்துக்கள் விமர்சிக்கப்படுவதும் அரசு இயந்திரம் செயல்படும் விதம் சித்தரிக்கப்படும் விதமும் முக்கியமானவை. ஆனால் கடத்தல் நாடகத்தின் தன்மைகள், விமானத்துக்குள் நடக்கும் நிகழ்வுகள், விமானத்திற்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களின் வகை மாதிரிகள், மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.
கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படம் துணிச்சலான முயற்சி என்ற பெயரால் நிகழ்த்தப்படும் அத்துமீறலுக்குச் சரியான உதாரணம். உளவியல் சார் குற்றவியல் கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. குற்றங்களில் ஈடுபடுபவரின் மனப் பிறழ்வுக்கான காரணமாக மேனன் காட்டும் அம்சமும் புதிதல்ல. மனப் பிறழ்வு கொண்ட பாத்திரத்தைக் காட்டப் பயன்படுத்தப்படும் கோணங்களும் புதியவை அல்ல. காட்சியமைப்பில் வித்தியாசம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் போதாது. அவை நம்பகத்தன்மையுடன் உருப்பெற வேண்டும். அது இந்தப் படத்தில் இல்லை. படத்தில் தாய்மை என்னும் படிமம் களங்கப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எந்தப் படிமமும் தன்னளவில் புனிதமானது அல்ல. ஆகிவந்த படிமங்களைக் கட்டுடைக்கும் உரிமை படைப்பாளிக்கு இருக்கிறது. ஆனால் அதிர்ச்சி மதிப்புக்காகவோ மலினமான ஈர்ப்புக்காகவோ செய்யப்படும் திருகல்கள் கட்டுடைப்பாகாது. கட்டுடைப்பு என்பது ஒரு பார்வை. மாற்றுப் பார்வை. மலினமான உத்தி அல்ல. அனுபவம் சார்ந்த வலிமையிலும் வாழ்க்கை சார்ந்த காத்திரமான பார்வையிலும் வேர் கொண்டிராத கட்டுடைப்பு மலினமான பரபரப்பாகச் சிறுத்துப்போகும். கௌதம் மேனனின் படத்தில் நடப்பது இதுதான்.
குற்றவியலை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான படம் என்னும் அளவிலும் நடுநிசி நாய்கள் எடுபடாமல்போனது. விறுவிறுப்பான திரைக்கதையை அமைப்பதில் தன் திறனை நிரூபித்துள்ள இயக்குநர் பரிசோதனை என்னும் பெயரால் சூடு போட்டுக்கொண்ட பரிதாபமாகவே இப்படத்தைப் பார்க்க முடிகிறது. சுந்தர ராமசாமியின் கவித்துவப் படிமத்தை வெகுஜன தளத்துக்கு எடுத்துச் சென்றதைத் தவிர இப்படம் குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கவில்லை.
அறிவுஜீவி இயக்குநராகப் பார்க்கப்படும் மிஷ்கினின் யுத்தம் செய் படம் மிகுதியும் பாவனைகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொண்ட படம். குற்றம் சார்ந்த கதையை நேர்க் கோட்டில் அமையாத வித்தியாசமான கதை கூறலிலும் அதிர்ச்சியூட்டும் காட்சிப் படிமங்களுடனும் கூறிச் செல்கிறார் மிஷ்கின். கதையின் மர்ம முடிச்சு ஓரளவுவரையிலும் காப்பாற்றப்பட்டுப் படத்தை அலுப்பின்றி நகர்த்திச் செல்கிறது. குற்றங்கள், புலனாய்வு ஆகியவற்றின் பின்னணியில் ஒரு சில மனிதர்களின் சோகத்தைச் சித்தரிக்கும் முயற்சி படத்தின் கனத்தைக் கூட்ட ஓரளவு உதவுகிறது. மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கும்போது படத்தின் கட்டுமானம் தளர்ந்து பலவீனமடைகிறது. ஊடகத்தின் மீதான இயக்குநரின் பிடி தளர்கிறது. குற்றங்களின் பின்னணி சாமானிய மக்களின் சீற்றம் என்னும் ஆகிவந்த சட்டகத்துக்குள் சிறைப்பட்டிருக்கிறது. வழக்கமான கதை முடிச்சை வித்தியாசப்படுத்திக்காட்ட இயக்குநர் முயன்றிருப்பது அம்பலமாகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பெயரையும் அவரது வாசகங்களையும் துணைக்கு அழைத்துப் படத்தின் அறிவார்த்த முகத்தைக் கட்டமைக்க முயல்கிறார் மிஷ்கின்.
புது இயக்குநர் அமுதனின் தமிழ் படம் வணிக சினிமாவைப் பகடி செய்யும் போக்கில் அதே வணிக அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. மேலோட்டமான பகடி என்னும் அளவில் நிற்கும் இந்தப் படம் திரைப்பட அனுபவத்தைத் தரத் தவறுகிறது.
இதழியலாளரின் வாழ்வைச் சற்றே யதார்த்தமாகச் சொல்ல முயலும் கரு. பழநியப்பனின் சதுரங்கம், ஒற்றைப்படைத் தன்மை காரணமாகப் பலவீனமடந்திருக்கிறது.
**
மேலே குறிப்பிட்டுள்ள இந்தப் படங்கள் பெரும்பாலானவற்றில் ஒளிப்பதிவு நன்றாக இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். செழியன் (தென் மேற்குப் பருவக் காற்று), ஓம் பிரகாஷ் (வாகை சூட வா), வேல்ராஜ் (ஆடுகளம்), நீரவ் ஷா (தெய்வத்திருமகள்), பி.எஸ். வினோத் (ஆரண்ய காண்டம்) ஆகிய ஒளீப்பதிவாளர்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். கதைக்கு ஏற்ற வண்ணங்கள், கோணங்கள், அர்த்தபூர்வமான அண்மைக் காட்சிகள், காட்சியின் தன்மைக்கு ஏற்ப ஒளி, நிழல் ஆகியவை பயன்படுத்தப்படுவது ஆகியவை காட்சி ஊடகத்தின் தன்மையை நம் இயக்குனர்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. கதையம்சமும் இயக்குநரின் ஆளுமையும் அழுத்தமாக வெளிப்படும் படங்களில் இசையமைப்பாளர்களும் சிறப்பாகச் செயல்படுவதையும் உணர முடிகிறது. உரிய களமோ சுதந்திர வெளியோ இல்லாமல் திறமை தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. மேலே உள்ள படங்களின் இயக்குநர்களால் முழுமையான கலை அனுபவத்தைச் சாத்தியப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியோருக்கான வெளியைத் தங்கள் படங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். காத்திரமான இயக்குநர்களுக்கான வெளி இங்கே விரிவுபடுத்தப்படும்போது இயக்குநர்களும் மேலான விதத்தில் வெளிப்படுவார்கள் என்று நம்ப இடம் இருக்கிறது.
குரூரமான வணிக விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் திரை உலகில் நிகழும் ஆரோக்கியமான சலனங்களின் எண்ணிக்கை தமிழ்ப் படங்கள் குறித்து அதிக நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இல்லை என்பதே 2011ஆம் ஆண்டுப் படங்கள் தரும் ஒட்டுமொத்தமான மனப்பதிவு. சுமார் 135 படங்கள் வெளியான ஒரு ஆண்டில் பத்துப் படங்கள்கூட வணிக ரீதியாகவோ தரம் சார்ந்தோ தேறவில்லை. வணிக நிர்ப்பந்தங்களில் சிக்காத படங்களுக்கான வெளி இங்கே உருவாக்கப்படும்போது தமிழிலும் கலைத் தரமான படைப்புகள் உருவாகும். அத்தகைய வெளியை எப்படி உருவாக்குவது என்பதுதான் தமிழ் சினிமா குறித்து அக்கறை கொள்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.
**
No comments:
Post a Comment