Tuesday, February 14, 2012

மெரீனா: அனுபவமாக மாறாத பதிவுகள்

தமிழில் மசாலாப் படங்களுக்கு இருப்பதைப் போலவே “வித்தியாசமான படம்” என்று சொல்லப்படும் படங்களுக்கும் சில சூத்திரங்கள் உள்ளன. அதுவும் வன்முறை, கவர்ச்சி, தனி காமெடிக் கிளை ஆகியவை இல்லாத படங்களுக்கான சூத்திரங்கள் மிகவும் எளிமையானவை. படத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே நல்லவர்களாக இருப்பார்கள். யாராவது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொன்மொழி உதிர்த்துப் புத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். திரையில் பெருக்கெடுத்தோடும் அன்பு பொங்கி வழிந்து திரையரங்கையே நனைக்கும். யதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமான சில பாத்திரங்கள் தட்டுப்படுவார்கள். ஆனால் நெருக்கடியின்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் யதார்த்தமாக இருக்காது. படம் முழுவதும் கலகலப்பு இருக்கப் பெரும் முயற்சி மேற்கொள்ளப்படும். இரண்டு காட்சிகளுக்கு ஒரு முறை பார்வையாளரின் விழியோரங்களை ஈரமாக்கும் முயற்சி நடக்கும் உச்சக் காட்சியில் கதறி அழவைக்கும் முயற்சியும் அரங்கேறும்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் மெரீனா படமும் இந்தப் பண்புகளுக்கு விதிவிலக்கல்ல. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்னும் பெருமை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் அசையும் வாழ்வியக்கத்தின் சில பரிமாணங்களைப் பதிவு செய்வதில் பாண்டிராஜ் வெற்றி பெற்றுள்ளார். வலுவான ஒரு கதையோட்டத்துடன் இவற்றைச் சொல்லத் தவறியிருக்கிறார்.

குழந்தைகளின் கொண்டாட்டங்கள், வலிகள், மொழி முதலானவற்றை உள்ளடக்கிய அவர்களது உலகை நுட்பமாக உள்வாங்கி நேர்த்தியாகக் காட்சிப்படுத்துவதில் தனக்குள்ள திறமையைப் பாண்டிராஜ் 'பசங்க' படத்திலேயே நிரூபித்துவிட்டார். இதில் மீண்டும் ஒருமுறை அதையே செய்கிறார். பின்னணி மட்டும்தான் மாறுபடுகிறது. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் வாழ்வை உயிர்த் துடிப்புடன் பதிவு செய்திருக்கிறார். அவர்களுடைய சந்தோஷங்கள், சண்டைகள், போட்டிகள் (ஓட்டப் பந்தயம் முதல் மூத்திரப் பந்தயம் வரை), கஷ்டங்கள் ஆகியவற்றைக் கண் முன் நிறுத்துகிறார். பிச்சைக்காரர்கள், குதிரைச் சவாரிக்காரர், தபால்காரர், கடற்கரைக் காதலர்கள், காவலர்கள் ஆகியோரை இவர்களைச் சுற்றிலும் இயங்கவைத்துப் படத்தை நகர்த்துகிறார். இருந்தும் கதையம்சம் என்ற ஒரு பண்டமே இல்லாததால் படம் உதிரிகளின் தொகுப்பாக நின்றுவிடுகிறது.

கதையம்சம் இல்லாத படைப்புகளில் வாழ்க்கை சார்ந்த சித்திரிப்புகளில் பிரதிபலிக்கும் யதார்த்தத்தின் வலுவும் நாடகீயமான தருணங்களும் படத்தைப் பார்க்க வைக்கும். ஆனால் மெரீனாவில் இவை இரண்டும் இல்லை. பிச்சை எடுக்கும் பெரியவர் முதலான பாத்திரங்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் படத்தில் அவர்கள் பயன்படுத்தப்படும் விதம் யதார்த்தமாக இல்லை. பார்வையாளர்களின் மனதைத் தொடுவதற்கான வலிந்த முயற்சியாகவே அது உள்ளது. கடைசியில் அவர் மரணமடைவது இந்த முயற்சியின் உச்சம். காதலர்களின் சித்தரிப்பில் வேடிக்கை இருக்குமளவு இயல்பான தன்மை இல்லை.

'பசங்க' படத்தில் ‘இங்கிட்டு மீனாட்சி சுந்தரம், அங்கிட்டு யாரு?’ என்று பேசிய இயல்பான பாத்திரத்தை இதில் காண முடியவில்லை. காதலனும் காதலியும் செயற்கையான துணுக்குகளாகவே ஒட்டாமல் வந்து போகிறார்கள். சிவ கார்த்திகேயனின் இயல்பான முக பாவங்களும் ஓவியாவின் அழகான முக பாவங்களும் இந்தக் காட்சிகளை ஓரளவு காப்பாற்றுகின்றன.

காவலர்களால் தேடப்படும் சிறுவனைக் குறித்த நாடகீயமான நிகழ்வுகள் ரசிக்கும்படி இல்லை. படிக்கும் வயதில் படிக்க வேண்டும் என்ற செய்தி செய்தியாகவே முன்வைக்கப்படுகிறது. அனுபவமாக மாறவில்லை.

இத்தகைய பிரச்சினைகளை மீறிப் படத்தில் சில விஷயங்கள் சிறப்பாக உள்ளன. சென்னை வாழ்வின் பன்முகத்தைப் பிரதிபலிக்கும் மெரீனா கடற்கரையில் அசையும் வாழ்வு அதன் வண்ணங்களுடன் நன்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. விஜயின் ஒளிப்பதிவு அபாரம். கால நிலை சார்ந்த மற்றங்களை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது இவரது ஒளிப்பதிவு. புது இசையமைப்பாளர் கிரிஷின் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அவரது பின்னணி இசை பிரமாதம். பல காட்சிகளில் இசை பிரத்யேகமான மொழியாகக் காட்சிக்கு வலுசேர்க்கிறது. ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை’ பாடலில் சென்னையின் பண்பாட்டை நா. முத்துக்குமார் அழகாக வெளிப்படுத்துகிறார். பாண்டிராஜின் வசனங்கள் மிக இயல்பாக உள்ளன. விளிம்பு நிலை மக்களின் மொழியில் புழங்கும் சில பிரத்யேகமான சொற்களை லாகவமாகக் கையாள்கிறார். பக்கடா பாண்டி முதலான சிறுவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

விஜய், கிரிஷ் மற்றும் சில சிறுவர்களின் துணையோடு மெரீனாவில் நம்மைச் சுற்றுலா அழைத்துக்கொண்டு போகிறார் பாண்டிராஜ். சுற்றுலாப் பயணி என்ற முறையில் திருப்தியுறும் நம் மனம் படைப்பனுபவத்தைப் பெற முடியாமல் போவதில் அதிருப்தியடைகிறது.

No comments: